புதுடெல்லி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி குறித்து ட்விட்டரில் பதிவிட்டது தொடர்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியா மீது பெங்களூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் பாபு பெங்களூர் ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் அமித் மாளவியா மீது கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 153A, 120b, 505(2), 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அமித் மாளவியா, ராகுல் காந்தியின் அமெரிக்க பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், ராகுல் காந்தி ஓர் அபாயகரமான வஞ்சக விளையாட்டை விளையாடுகிறார் என்று தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் எந்த ட்வீட் பதிவுக்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை.
இது குறித்து கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே கூறுகையில், “ஒரு பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்ளும்பொழுது எல்லாம் பாஜக கண்ணீர் வடிக்கிறது. இந்தநாட்டின் சட்டத்தை பின்பற்றுவதில் அவர்களுக்கு சிக்கல் உண்டாகிறது. நான் பாஜகவினரிடம் முதல் தகவல் அறிக்கையில் எந்த இடத்தில் பிரச்சினை உள்ளது என்று கேட்க விரும்புகிறேன். நாங்கள் சட்ட ஆலோசனைக்கு பின்னர்தான் வழக்குப் பதிவுசெய்துள்ளோம். அப்படியே தவறு இருப்பதாக கருதினால் எங்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பிரியங் கார்கேவுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள பெங்களூரு தெற்கு எம்.பி. தேஜஸ்வி சூர்யா, “அமித் மாளவியா மீது அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு எதிராக கருத்து கூறியதாக கூறி அவர் மீது ஐபிசி 153A மற்றும் 505(2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டும் இரு பிரிவினர்களுக்கு இடையில் பகையை உண்டாக்குவது பற்றியது. அப்படி என்றால் ராகுல் காந்தி என்பது என்ன? ஒரு தனிநபர், ஒரு குழு, ஒரு வகுப்பா? இதை நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.