இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃப்கத் பாசில் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர், முக்குலத்தோர் எழுச்சிக் கழகம் மாமன்னன் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கண்டன போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் ஜாதி மோதல்களை மாமன்னன் திரைப்படம் உருவாக்குவதாகவும், அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டன.
இந்நிலையில் மதுரையில் 10க்கும் மேற்பட்ட திரையரங்கில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி உள்ளது. மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாவில் முதல் காட்சியாக 9 மணிக்கு மாமன்னன் திரைப்படம் வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேதாஜி சுபாஷ் சேனை, முக்குலத்தோர் எழுச்சிக்கழகம் அமைப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திரையரங்கம் முன்பு முற்றுகையிட முயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து திரையரங்கம் முன்பு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டம் நடத்திய அமைப்பினரை செல்லூர் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர்.