சந்திரசேகர் ராவ் பாஜகவுக்கு அடிபணிந்துவிட்டார்: ராகுல் காந்தி!

சந்திரசேகர் ராவ் பாஜகவுக்கு அடிபணிந்துவிட்டார். என்று கம்மம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் காந்தி பேசியதாவது:

முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் பாஜகவுக்கு பிஆர்எஸ் அடிபணிந்துவிட்டது.

பிஆர்எஸ் என்பது பாஜகவின் உறுப்பினர் குழு. நாடாளுமன்றத்தில் பாஜகவைக் காங்கிரஸ் எப்போதும் எதிர்த்து நிற்கும். ஆனால், சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் பாஜகவின் 2ஆவது அணி போல செயல்படும்.

தெலங்கானா மாநிலத்தை அவரது ராஜ்யமாகவும், அவரை அதன் மன்னராகவும் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். தெலங்கானா முதல்வரைக் கைப்பாவை போல் பிரதமர் மோடி கட்டுப்படுத்துகிறார். பிகாரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பிஆர்எஸ் அங்கம் வகிக்கும் எந்தக் கூட்டணியிலும் காங்கிரஸ் இடம்பெறாது என எதிர்க்கட்சித் தலைவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்தேன்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. ஆனால் தற்போது, தெலங்கானாவில் பாஜக தடம் தெரியாமல் மறைந்ததால் காங்கிரசுக்கும் பாஜகவின் 2-ஆவது அணியான பிஆர்எஸ்- க்கும் இடையில் மட்டுமே போட்டி. கர்நாடகத்தில் ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரின் ஆதரவோடு ஊழல் ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சியமைத்தோம். காங்கிரஸ் முதுகெலும்பான தொண்டர்களின் ஆதரவோடு தெலங்கானாவிலும் நமது வெற்றி தொடரும். இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது பெரும் ஆதரவு கிடைத்தது. அதற்காக மாநில மக்களிடம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சியின் சிங்கங்களான தொண்டர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். தொண்டர்கள் அனைவரையும் அச்சுறுத்த ஆளுங்கட்சி எண்ணியது. ஆனால், தொண்டர்கள் யாரும் பயப்படவில்லை.

காங்கிரஸ் கொள்கை மீது நம்பிக்கை கொண்டு எங்களைத் தொடர்ந்து கம்மம் பகுதி ஆதரித்துள்ளது. காங்கிரசில் இணைந்த இப்பகுதி தலைவர்களை நான் வரவேற்கிறேன் என்றார் ராகுல் காந்தி.

RELATED ARTICLES

Recent News