தெலுங்கானாவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் ஒப்புதல் பெறுவதற்காக எந்த மசோதாவும் தன்னிடம் நிலுவையில் இல்லை என அவர் குறிப்பிட்டு உள்ளார். தன்னிடம் ஒப்புதலுக்காக வந்த மசோதாக்களில் 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், 2 மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மீதமுள்ள மசோதாக்கள் அனைத்தும் அரசின் விளக்கம் மற்றும் தகவலுக்காக திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் அந்த செய்திக்குறிப்பில் விளக்கம் அளித்து உள்ளார்.
பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக இந்த அறிவிப்பு வெளியிடுவதாகவும், மசோதா தொடர்பான எந்த செய்தியும் வெளியிடுவதற்கு முன் ஆளுநர் மாளிகையில் விளக்கம் பெற்று வெளியிடுமாறு செய்தி நிறுவனங்களை கேட்டுக்கொள்வதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.