மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது கருணாநிதியின் இலக்கு என்று சேலம் அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசியதாவது: “தமிழ்நாட்டை பொறுத்தவரை 36 அரசுக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் 21, நிகர்நிலை கல்லூரிகள் 13 என மொத்தமாக 71 கல்லூரிகள் உள்ளன. இந்தியாவில் 36 மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போல ஒன்றரை மடங்கு அதிக பரப்பளவு உள்ள மாநிலங்களை விட இங்கு அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வோரு ஆண்டும் 11 ஆயிரம் மாணவர்கள் மருத்துவக் கல்வி நிறைவு செய்து வருகின்றனர்.
தற்போது ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க ரூ. 400 கோடி தேவைப்படுகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது கருணாநிதியின் இலக்கு . மத்திய அரசு இப்போது இந்த இலக்கை அறிவித்துள்ளது. இன்னும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தேவை என்ற நிலை உள்ளது. முதலமைச்சர் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார். 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டால் இந்திய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி உள்ள பெருமையை தமிழகம் பெரும்.
மேலும் , 150 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடர்ந்து பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பிறகு கட்டண வசதி வார்டுகள் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் கட்டண வசதி வார்டுகள் தொடங்கப்பட்டன. தருமபுரியிலும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் சேலம் மருத்துவமனை முன்னோடியாக உள்ளது “என்று கூறினார்.