தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே அரக்கோணம் சாலை,திம்ம சமுத்திரம் பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி லாரிகளில் கடத்த முயன்றதாக காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலின் அடிப்படையில் திம்ம சமுத்திரம் பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது இரண்டு கண்டெய்னர் லாரிகளில் 40 கிலோ வீதம் ரேஷன் அரிசி கட்டிய நிலையில் 250 மூட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து 9 டன் அளவிலான ரேஷன் அரிசியையும், இரண்டு லாரிகளையும் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அரிசி கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.