சென்னையில் மகளிர் உரிமைத் தொகை முகாம் ஜூலை 24ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான முகாம் பற்றி சென்னை மேயர் பிரியா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சென்னையில் மட்டும் 3,200 இடங்களில் மகளிர் உரிமைத் தொகைக்கான முகாம்கள் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள 1,415 ரேஷன் கடைகளில் தன்னார்வளர்களை நியமித்து விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னையில் மகளிர் உரிமைத் தொகை முகாம் ஜூலை 24ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தவிருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மகளிர் உரிமைத் தொகைப் பெறும் மகளிருக்கான தகுதிகள், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்து வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், நியாய விலைக் கடைகளில் அதற்கான முகாம்கள் நடத்தப்படும் என்றும், சிறப்பு முகாம்கள் ஜூலை 24ஆம் தேதி தொடங்கும் என்றும் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.