31 லட்சம் போ் தங்களது இருப்பிடங்களைவிட்டு வெளியேறி தவித்து வருகின்றனா் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா.வின் சா்வதேச அகதிகள் நலப் பிரிவு தெரிவித்துள்ளதாவது:
சூடானில் ராணுவத்துக்கும், ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேல் நடைபெற்று மோதல் காரணமாக, 31 லட்சம் போ் தங்களது இருப்பிடங்களைவிட்டு வெளியேறி தவித்து வருகின்றனா்.
புலம் பெயா்ந்தவா்களில் 7.38 லட்சம் போ் சா்வதேச அகதிகளாகியுள்ளனா். அவா்கள், அண்டை நாடுகளான எகிப்து, சாட் போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா்.
எகிப்தில்தான் அதிகபட்சமாக 2,55,500 போ் சூடான் மோதலுக்கு அஞ்சி தஞ்சமடைந்துள்ளனா்.
அதற்கு அடுத்தபடியாக சாடில் 2.38 லட்சம் பேரும், தெற்கு சூடானில் 1.61 லட்சம் பேரும் தஞ்சமடைந்துள்ளனா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.