இந்து கடவுள் பார்வதி சிவன் குறித்து தர்மபுரி திமுக எம்.பி செந்தில் குமார் நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதனை கண்டித்து அவர் மீது இந்து மக்கள் கட்சி மாநில துணை செயலாளர் இசக்கி வெங்கட் ராஜா தலைமையில் பார்வதி சிவன் வேடமணிந்து வந்து 100கும் மேற்பட்டோர் அரசு பேருந்தில் வந்து இறங்கினர்.
பின்னர் ஊர்வலமாக நடந்து வந்து திமுக எம்.பி செந்தில் குமாருக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு நிலவியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் பின்னர் முக்கிய நிர்வாகிகளை மட்டும் புகார் மனு அளிக்க காவல் ஆணையர் அலுவலகம் உள்ளே அனுமதித்தனர். இதனை தொடர்ந்து ஆவடி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.
இந்த புகார் மனுவில் திமுக எம்.பி செந்தில் குமார் இந்து கடவுள்களான சிவன் பார்வதி ஆகியோரை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இது இந்து மக்கள் மனதை புண்படுத்தியுள்ளது.எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.