வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி அபார வெற்றி. அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலே 171 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12அம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.
இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களும், ரோகித் சர்மா 103 ரன்களும், விராட் கோலி 76 ரன்களும் விளாசினர். இதன் மூலம் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடங்கியது. ஆனால் அஸ்வினின் அபார பந்துவீச்சால் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் 171 ரன்கள் குவித்த அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது குறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேசுகையில், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்காக நன்றாக தயாராகினோம். பிட்ச், மைதனாம் உள்ளிட்டவை குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் அதிகமாக உரையாடினேன். அதேபோல் என் மீது நம்பிக்கை வைத்ததற்காக தேர்வுக் குழு, கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.இதற்காக தான் இத்தனை நாட்களாக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தேன்.
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது ஸ்பெஷலானது. எனக்கு இது மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். அதேபோல் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது வெறும் ஆரம்பம் மட்டுமே. கவனத்தை சிதறவிடாமல் அடுத்தடுத்து பேட்டிங்கில் முன்னேற்றமடைய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த பாதையில் முன்னேறுவதற்கு ஏராளமானோர் உதவி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சீனியர் வீரர்களுடன் விளையாடியது உற்சாகமான அனுபவமான இருந்தது. களத்தில் அவர்களுடன் பேட்டிங் செய்யும் போது அதிகம் கற்றுக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.