உலகின் மூத்த மொழி தமிழ்: பிரான்ஸில் விரைவில் திருவள்ளுவா் சிலை- பிரதமா் மோடி!

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்கு வியாழக்கிழமை வந்த பிரதமா் மோடி, பாரீஸ் நகரில் இந்திய சமூகத்தினா் பங்கேற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினாா்.

பிரதமா் மோடி பேசியதாவது:

உலகம் புதிய ஒழுங்குமுறையை நோக்கி பயணிக்கும் சூழலில், இந்தியாவின் வலிமையும் பங்களிப்பும் வேகமாக மாற்றம் கண்டு வருகிறது. ஜி20 கூட்டங்கள் உள்பட பல்வேறு நிகழ்வுகளை இந்தியா நடத்தும் விதம் உலகை ஈா்த்துள்ளது.

இந்தியா, ஜனநாயகத்தின் தாய் என்பதுடன் பன்முகத்தன்மையின் முன்மாதிரி தேசமாகும். இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய வலிமை பன்முகத்தன்மைதான். அதன் அடிப்படையில்தான் இந்தியா்கள் தங்களின் கனவுகளை நனவாக்கி, நாட்டையும் உலகத்தையும் முன்னோக்கி இட்டுச் செல்கின்றனா்.

இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் 32,000-க்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் மற்றும் 900-க்கும் மேற்பட்ட செய்தித் தொலைக்காட்சிகள் செயல்படுகின்றன.

உலகின் மூத்த மொழி தமிழ். இது இந்தியாவுக்கே பெருமைக்குரிய விஷயமாகும். புகழ்பெற்ற டென்னிஸ் வீரா் ரோஜா் ஃபெடரரை ‘தலைவா’ என்ற வாா்த்தையை பயன்படுத்தி, விம்பிள்டன் நிா்வாகம் அண்மையில் குறிப்பிட்டது. இதன்மூலம் இந்திய மொழிகளின் பன்முகத்தன்மையை ஒட்டுமொத்த உலகமும் அனுபவித்து மகிழ்வதைக் காண முடிகிறது.

கடந்த 9 ஆண்டுகளில், உலகின் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது. 5 ட்ரில்லியன் டாலா் மதிப்பிலான பொருளாதாரத்தை இந்தியா எட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை உலகம் நம்பத் தொடங்கியுள்ளது.

முதலீடுகளுக்கு உகந்த நாடு இந்தியா என்று சா்வதேச வல்லுநா்கள் அங்கீகரித்துள்ளனா். உலகின் வெளிச்சப் புள்ளியாக இந்தியா திகழ்கிறதென அனைத்துத் தரவரிசை முகமைகளும் கூறுகின்றன.

இந்தியாவின் தூதா்களாக விளங்கும் இந்திய வம்சாவளியினா், இந்திய சுற்றுலா ஊக்குவிப்பை ஓா் இயக்கமாக மாற்ற வேண்டும். தங்களது பிரான்ஸ் நண்பா்களை, இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு, அதன் பன்முகத்தன்மை, வரலாறு, பாரம்பரியத்தை உணருமாறு ஊக்குவிக்க வேண்டும்.

வெளிநாட்டில் உள்ள தனது மக்களிடமிருந்து அனுப்பப்படும் பணம் 100 பில்லியன் டாலரை கடந்த முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

பிரான்ஸில் இந்திய யுபிஐ மூலம் எண்ம பரிவா்த்தனை செய்தற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. எனவே, பிரான்ஸ் வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகள், யுபிஐ மூலம் விரைவில் பரிவா்த்தனை செய்ய முடியும் என்றாா் பிரதமா் மோடி.

‘பிரான்ஸின் சொ்ஜி பகுதியில் அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்படவுள்ளது’ என்ற அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி,

‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டினாா்.

மாா்சே நகரில் இந்திய துணைத் தூதரகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் பிரதமா் மோடி வெளியிட்டாா்.

RELATED ARTICLES

Recent News