கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பிஎஸ்எஃப்) இன்று கைது செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் (கிராமப்புற) மாவட்டத்தின் கமிர்புரா கிராமம் அருகே, சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் கவனக்குறைவாக வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தானியர் ஒருவர் நுழைந்துள்ளார். அவரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையின் போது, பிடிபட்ட பாகிஸ்தானியர் கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து எந்தவித ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை என்று பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
விசாரணைக்குப் பின்னர் மனிதாபிமான அடிப்படையில் அவர் குர்தாஸ்பூர் செக்டரில் உள்ள பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கவனக்குறைவாக எல்லையைத் தாண்டுபவர்களை கையாளும் போது, பிஎஸ்எஃப் எப்போதும் மனிதாபிமான அணுகுமுறையையே கையாண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.