பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர் நாள் விழா கருவடிகுப்பம் பகுதியில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மதியம் 3 மணியளவில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை வரவேற்பதற்காக என்.சி.சி மாணவர்கள் மணி மண்டபத்தின் வெளியே வெய்யிலில் நிற்க வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து நேரத்திற்கு வராமல், தாமதமாக வந்ததால் என்.சி.சி மாணவர்கள் சிலர் வெய்யில் கொடுமை தாங்காமல் மயங்கி கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அரசு அதிகாரிகளும் ஆளுநர் தமிழிசையை வரவேற்க நீண்ட நேரம் காத்திருந்தனர். மேலும் விழாவில் பங்கேற்ற பெற்றோருக்கு போதிய இருக்கை வசதி செய்து தராததால் ஆங்காங்கே தரையில் அமரும் அவல நிலை ஏற்பட்டது.
இதேபோல் விழா அரங்கில் குளிர்சாதன வசதி இருந்தும், அவை வேலை செய்யாததால் காற்றோட்ட வசதி இல்லாததால் விழாவிற்கு வந்தவர்கள் மிகுந்த அவதியுற்றனர்.