இந்திய அணியில் புதிய கேட்பன்!

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெயிக்கவாட் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆசிய போட்டிகள் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் இந்திய ஆடவர் அணியை அனுப்புவதற்கு பிசிசிஐ அண்மையில் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்டு 15 வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. அதன்படி கேப்டனாக ருதுராஜ் கெயிக்கவாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் அதிரடி வீரர் ஜெய்ஷ்வால், ராகுல் திருபாதி ,திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமத்,ரவி பிஸ்னாய், ஆவிஸ் கான், முகேஷ் குமார் ,சிவம் மவி, சிவம் துபே, பிரபு சிம்ரன் சிங் உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன் ஆகிய வீரர்கள் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

மெயின் வீரர்களில் யாரேனும் காயம் காரணமாக இடம்பெற முடியவில்லை என்றால் இந்த வீரர்கள் சேர்க்கப்படுவார்கள். உலகக் கோப்பை தொடர் நடைபெறும் சமயத்தில் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகிறது. இதனால் இந்த அணியில் இடம்பெற்று இருக்கும் நபர்கள் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு பரிசீலனை செய்யப்பட மாட்டார்கள் என தெரிகிறது.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்ட்ட ருதுராஜ் கெயிக்கவாட் கூறுகையில் , தங்கப் பதக்கம் வெல்வதும், பதக்க மேடையில் ஏறி நின்று நாட்டுக்காக தேசிய கீதம் பாடுவதும்தான் கனவாக உள்ளது.

பிசிசிஐ, நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் வழங்கிய இந்த வாய்ப்பிற்காக நான் உண்மையிலேயே நன்றி கூறுகிறேன்.

இந்தியாவுக்காக விளையாடுவது ஒரு பெருமையான உணர்வு மற்றும் இதுபோன்ற ஒரு சிறந்த நிகழ்வில் அணியை வழிநடத்துவது எனக்கும் தனிப்பட்ட முறையில் மற்றும் என்னுடன் இருக்கும் மற்ற அனைத்து அணி உறுப்பினர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

நாங்கள் அனைவரும் இளைஞர்கள் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல்லில் இந்தியா ஏ மற்றும் இந்தியாவுக்காக விளையாடி வருகிறோம். அணியில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் இது உற்சாகமாக இருக்கும்,என தெரிவித்தார்.

இதனிடையே, ஐபிஎல் தொடரில் கலக்கிய ரிங்கு சிங் இந்திய அணிக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே போன்று அஸ்வினை ஆசிய விளையாட்டு போட்டியின் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையும் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News