பா.ஜ.க. அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்து செல்வோம் – மல்லிகார்ஜுன கார்கே

வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பல்வேறு எதிர்க்கட்சிகள் கூறி வந்தது.

இந்நிலையில் பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் 2 நாட்களாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் இன்று நிறைவு பெற்றது. பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் பேசிய போது, நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். 26 கட்சிகள் ஒன்றிணைந்து ‘INDIA’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. மெகா கூட்டணியை வழிநடத்த 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படுகிறது. குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து மும்பை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பா.ஜ.க. அச்சம் அடைந்துள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள 38 கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என தெரியவில்லை. பா.ஜ.க. அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்து செல்வோம்.

பா.ஜ.க. ஆட்சியால் சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2024 நாடாளுமன்ற தேர்தல் மூலம் நிவாரணம் கிடைக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சி கூட்டணி மேற்கொள்ளும் என அவர் பேசியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News