மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.
இத்தகைய பதற்றமான சூழலில், மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி ஒன்று நேற்று இணையத்தில் வைரலானது.
மேலும், இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணின் சகோதரரை கலவரக்காரர்கள் கொன்றுள்ளனர்.
இந்த காணொலியை கண்ட மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பரவி வரும் காணொலியில் காணப்படும் சம்பவம் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் நடந்ததாகவும், கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேதி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.