மணிப்பூரில் கலவரக்காரர்கள் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோவை பார்த்து என் இதயம் நொறுங்கிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.
இத்தகைய பதற்றமான சூழலில், மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி ஒன்று நேற்று இணையத்தில் வைரலானது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மணிப்பூரில் பெண்கள் மீதான நடந்த வன்முறை சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மணிப்பூரில் பெண்கள் மீதான கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. நமது கூட்டு மனசாட்சி எங்கே? மனித குலத்தின் ஆன்மாவையே வெறுப்பும் விஷத்தனமும் வேரோடு பிடுங்குகிறது. மணிப்பூரில் நிகழும் இத்தகைய கொடூர வன்முறை அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்று, மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் மரியாதையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும்.
மணிப்பூர் முழுவதும் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.