மணிப்பூரின் பெண்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது. வலியாலும், கோபத்தாலும் என் இதயம் நிறைந்திருக்கிறது. மணிப்பூரில் நடந்த சம்பவம் நம் சமுதாயத்திற்கு வெட்கக்கேடானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி ஒன்று நேற்று இணையத்தில் வைரலானது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசியது:
“மணிப்பூர் சம்பவத்தில் ஈடுபட்ட எந்த குற்றவாளியும் தப்ப மாட்டார்கள் என்று நான் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். மணிப்பூரின் பெண்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது.
வலியாலும், கோபத்தாலும் என் இதயம் நிறைந்திருக்கிறது. மணிப்பூரில் நடந்த சம்பவம் நம் சமுதாயத்திற்கு வெட்கக்கேடானது.
அனைத்து மாநில முதல்வர்களும் மாநில சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறவும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தவும் அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.