ஆகஸ்ட் 4-ம் தேதி ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலையொட்டி கர்நாடகத்தில் பிரசாரத்தில் பேசிய ராகுல், மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தியதாகக் கூறி குஜராத் பாஜக எம்எல்ஏ பூா்ணேஷ் மோடி வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில் விசாரித்த சூரத் விசாரணை நீதிமன்றம், ராகுல் மீதான குற்றத்தை உறுதி செய்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மார்ச் 23-இல் தீா்ப்பளித்தது.
இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் கோரியும் ராகுல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் அமா்வு நீதிமன்றம் ராகுலுக்கு ஜாமீன் வழங்கி கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், அவதூறு வழக்கில் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அதில், ராகுலுக்கு தண்டனை விதித்திருப்பதால் 100 நாள்கள் மேலாக அவர் தொகுதிபணிகளை செய்ய முடியாமல் இருக்கிறார். ஏற்கனவே நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க முடியவில்லை என ராகுல் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, ராகுலின் மேல்முறையீடு மனுவுக்கு குஜராத் அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.