நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த வடுகப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை இடைவேளையின் போது பள்ளி கழிப்பறைக்கு சென்ற பட்டியலின மாணவர்கள் மீது பள்ளிக்கு வெளிப்புறம் இருந்து சிலர் கற்களை வீசியதாக தெரிகிறது. இதனை கண்ட மாணவர்கள் பயந்து வகுப்பறைக்கு சென்று ஆசியர்களிடமும், மதிய உணவு இடைவேளியின் தங்களது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கல்வி துறை அதிகாரிகள் மற்றும் மோகனூர் காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் 2 பேர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து 2 சிறுவர்களையும் மோகனூர் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று தாக்குதலுக்கு உள்ளான பட்டியலின மாணவர்களின் பெற்றோர் தங்களது குழந்தைகளை வகுப்புகளுக்கு அனுப்பாமல் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கல்வி துறை அதிகாரிகள், மோகனூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இனி இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாது என அளித்த உறுதியின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.