தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரை குறித்து அவதூறாக பேசிய புகாரில் பெயரில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் கைது செய்யப்பட்டார்.
காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும், கர்நாடக அரசை கண்டிக்க தவறிய திமுக அரசை கண்டிப்பது, தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பாஜக தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.ஏ.டி.கலிவரதன் பங்கேற்று பேசினார்.
அப்போது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மற்றும் திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்பட்டது.
இது குறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு அவரது வீட்டுக்கு சென்ற விக்கிரவாண்டி போலீசார் அவரைக் கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரைத் தனியிடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.