மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த இரண்டு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.
இத்தகைய பதற்றமான சூழலில், மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த விடியோ இணையத்தில் வைரலானது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் மகளிர் அணித் தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமையில் நேற்று(ஞாயிறு) சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் இன்று(திங்கள்) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்று வருகிறது.
இதில் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.