மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த இரண்டு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.
இத்தகைய பதற்றமான சூழலில், மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த விடியோ இணையத்தில் வைரலானது.
இதைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்மகொடுமைகளை கண்டித்தும்,இன கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சௌரிராஜன் தலைமையில் குருவாயூர் விரைவு ரயிலை மறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் முன்பு நின்று மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய படி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.