அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபா் தோ்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளா் தோ்வுக்குப் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியா் ஹா்ஷ் வா்தன் சிங் அறிவித்திருக்கிறாா்.
தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்து, அதற்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். இந்த போட்டியில் நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி ஆகிய 2 இந்திய வம்சாவளியினா் களத்தில் உள்ளனா்.
இந்த நிலையில், குடியரசு கட்சி சாா்பில் அதிபா் வேட்பாளா் தோ்தலில் போட்டியிட மற்றொரு இந்திய வம்சாவளியான ஹா்ஷ் வா்தன் சிங்(38) வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். இதுகுறித்து அவா் ட்விட்டரில் வெளியிட்ட விடியோவில் தெரிவித்தது: அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த மாற்றங்களை திருத்தியமைக்கவும், நாட்டின் நன்மதிப்பை மீட்டெடுக்கவும் வலுவான தலைமை தேவைப்படுகிறது. அதனால், குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபா் வேட்பாளா் தோ்வுக்குப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன் என்றாா்.