சிலப்பதிகாரத்தைப் படித்து பாண்டியன் செங்கோல் கதையை அறிய வேண்டும்: மக்களவையில் கனிமொழி!

நீங்கள் சிலப்பதிகாரத்தைப் படித்து பாண்டியன் செங்கோல் கதையையும் அறிய வேண்டும் என “இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் நேற்று (புதன்கிழமை) மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் திமுக மக்களவைக் குழு துணைத் தலைவர் கனிமொழி பேசினார்.

அவர் பேசியதாவது:

மணிப்பூர் மாநிலத்திலும், மத்தியிலும் பாஜக ஆட்சி இருப்பதால் இரட்டை என்ஜின் ஆட்சி என்று பெருமையுடன் கூறினர். ஆனால், இந்த இரட்டை என்ஜின் மணிப்பூர் மக்களுக்கு எதிராக இரட்டை முனைகள் கொண்ட ஆயுதமாக மாறியுள்ளது. இது இரட்டைப் பேரழிவு, இரட்டை முறிவு என்றுதான் கூறவேண்டும். அது எந்த அளவு என்றால் நாட்டில் முதன்முறையாக ஒரு மாநிலத்தைப் பாதுகாக்க நீதித் துறை தலையிடும் அளவு.

மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “இரண்டு சகோதரர்கள் சண்டையிடுகிறார்கள், அரசு ஒரு தந்தையாக இருந்து மத்தியஸ்தம் செய்கிறது’ என்கிறார் அந்த மாநில முதல்வர். இது அவமானம் இல்லையா? அங்கு பலத்த பாதுகாப்பு உள்ளது. கூடுதலாக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், மக்களைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது. புதிய நாடாளுமன்றத்துக்கு செங்கோலைக் கொண்டு வந்து பெரிய ஆடம்பர நிகழ்ச்சியை நடத்தினீர்கள். சோழர் மரபு என்று சொன்னீர்கள். நீங்கள் சிலப்பதிகாரத்தைப் படித்து பாண்டியன் செங்கோல் கதையையும் அறிய வேண்டும் என்றார் கனிமொழி.

RELATED ARTICLES

Recent News