மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக போலி ஊழல் குற்றச்சாட்டுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக அளித்த புகாரின் பேரில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசுக்கு 50 சதவீத கமிஷனை வழங்கிய பின்னரே தங்களுக்கான நிதி அளிக்கப்படுவதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த அரசு ஒப்பந்ததாரா்கள், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனா் எனப் பிரியங்கா காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ (ட்விட்டா்) பதிவில் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்தப் பதிவில், ‘‘கா்நாடக மக்கள், 40 சதவீத கமிஷன் அரசை ஆட்சியிலிருந்து நீக்கியது போன்று, ம.பி. மக்களும் 50 சதவீத கமிஷன் அரசை ஆட்சியிலிருந்து நீக்குவார்கள்’’ எனப் பதிவிட்டிருந்தார்.
கமல் நாத் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைவா்களும் இதே போன்ற பதிவை வெளியிட்டிருந்தனா்.
இந்நிலையில், மாநில அரசு மற்றும் பாஜகவின் புகழை சீா்குலைக்கும் வகையில் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவா்கள் பதிவிட்டுள்ளனா் என பாஜகவின் சட்டப் பிரிவைச் சோ்ந்த நிமேஷ் பாடக், சம்யோகித்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, இந்திய தண்டனையியல் சட்டத்தின் பிரிவு 420 (மோசடி), 469 (புகழைக் கெடுக்கும் நோக்கத்தில் பொய் கூறுதல்) உள்ளிட்டவற்றின்கீழ் பிரியங்கா காந்தி, கமல் நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களுடைய பதிவுகளின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக போலீசார் தெரிவித்தனா்.