தெற்கு ரஷ்யாவில் உள்ள தாகெஸ்தான் மாகாணத் தலைநகர் மாகாச்காலா என்ற இடத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நேற்று நள்ளிரவு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது . மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, மாகாச்சகாலா நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. 250-க்கும் மேற்பட்ட தீயைணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் , இதில் படுகாயமடைந்தவர்கள் விமானம் மூலம் தீவிர சிகிச்சைக்காக மாஸ்கோ கொண்டு செல்லப்பட்டனர்.
தீ பற்றியதை ஆய்வு செய்ததில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் எதிர்புறம் சாலையோரத்தில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு தீ பரவியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அந்தப் பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.