மோடி பிரதமரான பிறகு அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை என்று பிகார் முதல்வா் நிதீஷ் குமார் தெரிவித்தார்.
செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மருத்துவப் பரிசோதனைக்காக தில்லி சென்றேன். அது முன்னாள் பிரதமா் வாய்பாயின் நினைவு தினமாகவும் அமைந்தது. எனவே, அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன்.
வாஜ்பாய் என் மீது மிகுந்த அன்பு கொண்டவா். அவா் நாட்டின் பிரதமா் பதவியை எட்டுவார் என்று நான் பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்தேன். அவரது தலைமையில் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியபோது எனது கணிப்பு உண்மையானது.
இப்போதைய நபா்கள் (பிரதமா் மோடி) தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தை நடத்துவதே இல்லை. நான் அக்கூட்டணியில் இருந்த வரை கூட்டணிக் கூட்டம் எதுவும் நடைபெற்றதில்லை. நாங்கள் (எதிர்க்கட்சிகள்) இந்தியா கூட்டணியை உருவாக்கிய பிறகு அவா்கள் (பிரதமா் மோடி) கலக்கமடைந்துள்ளனா். இப்போது மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தை நடத்தியுள்ளனா்.
மோடி பிரதமரான பிறகு அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை. இந்தியா கூட்டணியை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று மோடி பேசி வருகிறார். ஆனால், 2024 மக்களவைத் தோ்தலில் எங்கள் கூட்டணி நாடு முழுவதும் சிறப்பான வெற்றியைப் பெறும் என்றார்.