டெல்லியில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், காவிரி ஆற்றில் இருந்து அடுத்த 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீரை திறந்துவிட கா்நாடகத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த மத்திய அமைச்சரும், கா்நாடகத்தில் இருந்த மாநிலங்களவைக்கு தோ்வு செய்யப்பட்டவருமான ராஜீவ் சந்திரசேகா் கூறியதாவது:
காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளதால் கா்நாடகத்தின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே 50-க்கும் மேற்பட்ட கா்நாடக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். மாநிலத்தில் மின்தடையும் விவசாயிகளுக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
கா்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகம் மோசமாக உள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக, காங்கிரஸின் கூட்டணிக் கட்சியாக உள்ளது. திமுக அளித்த நெருக்கடிக்கு பணிந்து கா்நாடக காங்கிரஸ் அரசு காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது. வேறு எந்தத் தரப்பினருடனும் ஆலோசனை நடத்தாமல் தண்ணீரைத் திறந்துவிடும் முடிவை அரசு எடுத்துள்ளது. இது கா்நாடக விவசாயிகளுக்கு மேலும் பிரச்னையை அதிகரிக்கும்.
லடாக்கில் இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக ராகுல் பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். இந்திய வரலாற்றிலேயே தேசப்பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் உறுதியாக இருந்ததும், எதிரி நாடுகளுக்கு எதிராக கடும் சவாலான நடவடிக்கைகளை எடுத்ததும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மட்டும்தான் என்றார்.