இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவுகள், மேக வெடிப்புகள், மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குல்லு மாவட்டம் அன்னி நகரில் இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மலையடிவாரத்தில் உள்ள கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிவதை அந்த வீடியோவில் காண முடிகிறது.
இமாச்சல பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மழை நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.