மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நிவின் பாலி. இவர் ‘மலர்வாடி ஆர்ஸ் கிளப்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்தார். 2015ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நாயகனாக நடித்தார். அப்படம் தென்னியந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமானது.
சமீபத்தில் அவருடைய நடிப்பில் வெளியான ‘மஹாவீர்யார்’, ‘படவெட்டு, ‘சாட்டர்டே நைட்’, ‘துறமுகம்’ ஆகிய படங்கள் கடும் தோல்வியைச் சந்தித்தன. இதனால், நிவின் பாலியின் படங்கள் மீதான எதிர்பார்ப்பு குறைந்தது. இந்நிலையில், இன்று ராமச்சந்திரன் பாஸ் அண்ட் கோ என்கிற புதிய படம் வெளியாகி அதுவும் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் நிவின் பாலி அதிக உடல் எடையுடன் காணப்பட்டார். அதே உடலுடன் சில படங்களிலும் நடித்தார். ஆனால், அவை தோல்விப் படமாக அமைந்தன. மீண்டும் உடல் எடையைக் குறைத்தார். ஆனாலும், பழைய தோற்றத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை. மோசமான கதை தேர்வுகளால் நிவின் பாலி தன் மார்க்கெட்டை இழந்து வருகிறார்.