கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களின் சொந்த செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் 1975 -76 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையை நிறுவ திட்டமிட்ட முன்னாள் மாணவர்கள் கடந்த 150 நாட்களுக்கு முன்னர் திருவள்ளுவர் சிலையை பள்ளி வளாகத்தில் நிறுவினார்கள். அதன் நினைவுச் சின்னமாக கல்வெட்டு ஒன்றும் நிறுவப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 18- ஆம் தேதி சிலை திறப்பு விழா அறிவிக்கப்பட்ட நிலையில் கல்வெட்டில் பெயர் பொறிக்கப்பட்டதில் பாரபட்சம் பார்க்கப்பட்டதாக கூறி சர்ச்சை எழுந்தது. கல்வெட்டில் பெயர் குறிக்கப்பட்டதில் சாதி அரசியலும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 150 நாட்களாக அய்யன் திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமலே மூடப்பட்ட நிலையில் காட்சியளித்து வருகிறது.
பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமல் இருப்பது பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதற்கு பள்ளிக் கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.