Connect with us

மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

அரசியல்

மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கேரள ஊடக அகாதெமி சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது:

கேரள மக்களும், தமிழ்நாட்டு மக்களும் ஒரே மொழிக் குடும்பமான, திராவிட மொழி குடும்பத்தைச் சார்ந்தவா்கள். சமத்துவத்துக்கு எதிராக இருக்கக் கூடியவா்களுக்கு திராவிடம் என்ற சொல் எரிச்சலாக உள்ளது. ‘திராவிட நாடு’ எனும் கோரிக்கையை முன்னெடுத்த முன்னாள் முதல்வா் அண்ணா, இந்தியாவைக் காப்பாற்றவும், நாட்டின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டும் அந்தக் கோரிக்கையை கைவிட்டார்.

அந்நிய நாட்டால் இந்தியாவுக்கு ஆபத்து வந்த காலம் அது. இதேபோன்றுதான், இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்துக்கும் ஆபத்து வந்திருக்கிறது. மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சமூக நீதியை சிதைக்கப் பார்க்கிறார்கள். இதனை அரசியல் தளத்தில் அரசியல் இயக்கங்களாகிய நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றும் பணியில் ஊடகங்களும் தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் தனது வேதம் என்று சொல்லி நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் வணங்கியவா் பிரதமா் மோடி. இப்போது அந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டுள்ளார்.

இதை நாட்டு மக்கள் உணா்ந்து இந்தப் போக்கை எதிர்க்க வேண்டும். நாட்டைக் காக்கின்ற முயற்சியில் தமிழ்நாடும் கேரளமும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விடியலை ஏற்படுத்த வேண்டும் என்றார் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

More in அரசியல்

To Top