சென்னை, மதுரவாயலை சேர்ந்த ரக்ஷன் என்ற 4 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீகேஜி படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக சிறுவனை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து சிறுவனின் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு காய்ச்சல் வந்து சிறுவன் உயிரிழந்ததாக கூறி சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு சென்ற காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தண்ணீர் குழாய் வசதி இல்லாததால் மாநகராட்சி வாகனம் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பேரல்களில் பிடித்து வைக்கும் நிலை உள்ளது. அதனால் அதில் விஷகொசுக்கள் உருவாகி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.