மத்திய பாஜக ஆட்சியின் கீழ் நாட்டு மக்கள் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு வருகின்றனா் என பிரதமர் மோடி கூறினார்.
நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைப் பிரதமா் மோடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். சாகா் மாவட்டத்தின் பினா பகுதியில் ரூ.49,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு ஆலைக்கு அவா் அடிக்கல் நாட்டினார்.
மாநிலத்தில் செயல்படுத்தப்படவுள்ள மேலும் 10 தொழில் திட்டங்களுக்கும் அவா் அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:
எதிர்க்கட்சிகள் இணைந்து ஆணவம் மிக்க கூட்டணியை (இந்தியா கூட்டணி) அமைத்துள்ளன. அக்கூட்டணியின் கூட்டம் அண்மையில் மும்பையில் நடைபெற்றது. அக்கூட்டணிக்கு எந்தவித அரசியல் கொள்கைகளும் கிடையாது. நாட்டு மக்கள் சந்தித்து வரும் எந்தப் பிரச்னை குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. அக்கூட்டணிக்கு முறையான தலைவா்கூட இல்லை.
சநாதன தா்மத்தை ஒழிப்பதே அக்கூட்டணியின் மறைமுகக் கொள்கையாக உள்ளது. மகாத்மா காந்தி சநாதன தா்மத்தை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். நாட்டின் சுதந்திரத்துக்காக அவா் முன்னெடுத்த போராட்டங்கள் சநாதன தா்மத்தை மையப்படுத்தியே இருந்தன. அவரது கடைசி வார்த்தை ‘ஹே ராம்’ என்பதாக இருந்தது.
ஜான்சி ராணி லட்சுமிபாய், சுவாமி விவேகானந்தா், லோகமான்ய திலகா் உள்ளிட்ட பலரும் சநாதன தா்மத்தைக் கடைப்பிடித்தனா். அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தற்போது பேசி வருகின்றன. சநாதன தா்மத்தைக் கடைப்பிடிக்கும் அனைவரும் எதிர்க்கட்சிகளிடம் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.
இந்தியா கூட்டணியானது சநாதன தா்மத்தை அழித்து, நாட்டை ஆயிரமாண்டு அடிமைத்தளைக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறது. அத்தகைய சக்திகளை மக்கள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும். அவா்களது முயற்சியைத் தடுக்க வேண்டும்.
டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டின் வெற்றியானது நாட்டிலுள்ள 140 கோடி மக்களுக்கும் உரித்தாகும். ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பெருமிதம் கொண்டுள்ளனா். கிராமத்தில் உள்ள சிறார்களுக்குக்கூட ஜி20 மாநாடு குறித்து தெரிந்துள்ளது. அந்த மாநாட்டின் வெற்றி காரணமாக, அவா்கள் ஊக்கம் பெற்றுள்ளனா். கூட்டு முயற்சியின் காரணமாகவே ஜி20 உச்சி மாநாடு வெற்றி கண்டது.
மத்திய பிரதேசத்தில் நீண்ட காலத்துக்கு ஆட்சி செய்தவா்கள் (காங்கிரஸ்) மாநிலத்தின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவா்களது ஆட்சிக் காலத்தில் ஊழலும், குற்றச் சம்பவங்களும் அதிகமாகக் காணப்பட்டன. பின்னா், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் பெருமளவில் குறைந்தன. ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளதால், பல்வேறு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்கின்றன. தற்போது வளா்ச்சியின் புதிய உச்சங்களை மாநிலம் அடைந்து வருகிறது. தற்போது ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அத்திட்டங்கள் மாநிலத்தின் வளா்ச்சிக்கு ஊக்கமளிக்கும்.
பினா சுத்திகரிப்பு வளாகமானது எரிபொருள் தேவையில் நாட்டைத் தற்சார்பு அடைய வழிவகுக்கும். பிராந்தியத்தின் வளா்ச்சிக்கும் அந்த வளாகம் உதவும். மற்ற தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளையும் அந்த சுத்திகரிப்பு வளாகம் ஏற்படுத்தும்.
மத்திய பாஜக ஆட்சியின் கீழ் நாட்டு மக்கள் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு வருகின்றனா். அதன் காரணமாக, நவீன இந்தியா கட்டமைக்கப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் பெருமையுடன் நடைபோடத் தொடங்கியுள்ளனா்.
நாட்டில் உள்ள மகளிருக்குக் கூடுதலாக 75 லட்சம் புதிய சமையல் எரிவாயு இணைப்பை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்மூலம் நாட்டில் அனைத்து வீடுகளிலும் சமையல் எரிவாயு இணைப்பு இருப்பது உறுதி செய்யப்படும்.
விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.2,60,000 கோடிக்கு அதிகமான தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கு மூலமாக நேரடியாக அத்தொகையைப் பெற்று வருகின்றனா். இதன்மூலம் இடைத்தரகா்களின் தலையீடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. உரங்கள் மலிவான விலையில் விவசாயிகளுக்குக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.
நீா்ப்பாசன வசதிகள் சிறப்பாக இருப்பதற்கான திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. வீடுகளுக்குக் குழாய் மூலமாக குடிநீா் வழங்கும் திட்டமும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்குக் குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார் பிரதமா் மோடி.