4.46 லட்சம் காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிப்பு: மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி!

4,46,000 காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவா்களில் 3,97,530 குழந்தைகள் வெற்றிகரமாக அடையாளம் காணப்பட்டு அவா்களின் குடும்பத்தினருடன் சோ்த்துவைக்கப்பட்டுள்ளனா் என்று மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

‘சட்ட முரண்பாட்டில் குழந்தைகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி பேசியதாவது:

காணாமல் போகும் குழந்தைகளை அடையாளம் கண்டு மீட்பதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டில் மத்திய அமைச்சகம் சார்பில் ‘கோயா – பாயா’ என்ற பிரத்யேக வலைதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இடப்பட்ட பதிவுகள் மூலமாக, இதுவரை 4,46,000 காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவா்களில் 3,97,530 குழந்தைகள் வெற்றிகரமாக அடையாளம் காணப்பட்டு அவா்களின் குடும்பத்தினருடன் சோ்த்துவைக்கப்பட்டுள்ளனா்.

அனாதை குழந்தைகள் தத்தெடுப்பதை எளிதாக்கும் வகையில், அதற்கு அனுமதியளிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களிடமிருந்து மாவட்ட ஆட்சியா்களுக்கு மாற்றும் வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறார் நீதி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக, 2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை 2,600 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டிருக்கின்றனா்.

கரோனா காலத்தில் இந்தியாவில் பல குழந்தைகள் அனாதைகளாகினா். அவா்களுக்கு மத்திய அரசு மட்டுன்றி, உச்ச நீதிமன்றம் ஆதரவு கரம் நீட்டியது. ஆதரவின்றி இருக்கும் குழந்தைகளை உடனடியாக அதிகாரிகளிடம் கொண்டுவர வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் மக்களைக் கேட்டுக்கொண்டது. இவ்வாறு ஆதரவற்றவா்களான 45,000 குழந்தைகள் தற்போது குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

குழந்தைகள் நல மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு பன்மடங்காக உயா்த்தியுள்ளது. 2009-10-ஆம் ஆண்டில் ரூ.60 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ரூ. 14,172 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் மூலமாக 7 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு மத்திய அரசு உதவிகளை வழங்கி வருகிறது என்றார்.

RELATED ARTICLES

Recent News