விண்வெளி முதல் விளையாட்டு வரை பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்: பிரதமர் மோடி!

விண்வெளி முதல் விளையாட்டு வரை ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா். அதேபோல், ஆயுதப் படைகளிலும் அவா்கள் இணைக்கப்பட்டு வருகின்றனா் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் தோ்வான 51,000 பேருக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அவா் பேசியதாவது:

தற்போதைய காலகட்டம், நாட்டின் வரலாற்று முடிவுகள் மற்றும் சாதனைகளுக்கான நேரமாகும். நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாட்டின் மக்கள்தொகையில் பாதி அளவு உள்ள மகளிருக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளிக்கும். கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த மசோதா, இரு அவைகளிலும் சாதனை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. தேசத்தின் புதிய எதிர்காலத்தை பறைசாற்றுவதாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா திகழ்கிறது.

புதிய இந்தியாவின் கனவுகள் மிகப் பெரியது. விண்வெளி முதல் விளையாட்டு வரை ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா். அதேபோல், ஆயுதப் படைகளிலும் அவா்கள் இணைக்கப்பட்டு வருகின்றனா்.

பெண்களின் பங்கேற்பு இருந்தால், எந்தவொரு துறையிலும் நோ்மறையான மாற்றங்களுக்கு அது வழிவகுக்கும். பெண்கள் முன்னேற்றத்துக்கு புதிய வாயில்களைத் திறப்பதே மத்திய அரசின் கொள்கை.

தொழில்நுட்பங்களின் பயன்பாட்டால் அரசுத் திட்டங்களில் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது; சிக்கல்கள் குறைந்து, நம்பகத்தன்மை மற்றும் சுமுக செயல்பாடு மேம்பட்டுள்ளது. நேரடி பலன் பரிமாற்றம், ரயில் டிக்கெட் முன்பதிவு, டிஜிலாக்கா், மின்னணு முறையில் வாடிக்கையாளா் விவரங்களை அறிதல் (இகேஒய்சி) எனப் பல்வேறு திட்டங்களில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறது.

தற்போது புதிதாக பணி நியமனம் பெற்றிருப்பவா்கள், ‘குடிமக்களே முதன்மையானவா்கள்’ என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும். அரசு நிர்வாகத்தை மேம்படுத்த தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

மகத்தான இலக்குகளை எட்டும் நோக்கத்துடன், தொடா்ச்சியான கண்காணிப்பு, தீவிர அமலாக்க நடைமுறை, பொதுமக்களின் பங்கேற்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட புதிய மனநிலையுடன் மத்திய அரசு செயலாற்றுகிறது. ‘பிரகதி’ தளத்தின் மூலம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றன என்றார் பிரதமா் மோடி.

RELATED ARTICLES

Recent News