ஈராக்கில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டின் நினேவா மாகாணத்தில் ஹம்தானியா என்ற பகுதியில் உள்ள அரங்கில் இன்று (செப்.27) கிறிஸ்தவ திருமணம் ஒன்று நடைபெற்றது. இதில் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் எதிர்பாராத விதமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீ வேகமாக பரவியதில் கூரையில் மேல் பகுதிகள் இடிந்து விழுந்துள்ளது. அங்கிருந்த மக்களால் வெளியேற முடியாமல் 100 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
150-க்கும் மேற்பட்டோர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறும் ஈராக் பிரதமர் முஹம்மது ஷியா அல்-சுடானி உத்தரவிட்டுள்ளார்.