சென்னை தி.நகர் சாலையில் இன்று அதிகாலை திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்களிடையே பரபரப்பு நிலவுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தி.நகர் சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் 10 அடி ஆழம், 3 அடி பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மேலும் அந்த பகுதியை ஒரு வழி சாலையாக மாற்றி பைக் மற்றும் கார்களுக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.
முதல்கட்ட தகவலில், அப்பகுதியில் நடைபெறும் கழிவு நீர் கால்வாய் பணியால் பள்ளம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.