கோவை மாவட்டம் வடகோவை சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் லீலாவதி. (வயது 32). இவர் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று காலை லீலாவதி வழக்கம்போல் வேலைக்காக தனது வீட்டில் இருந்து பூ மார்க்கெட் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று லீலாவதி மீது மோதியது. இதில் லீலாவதி சுமார் 50 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டார். இதனால் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் காந்திபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தை ஏற்படுத்தியது வட மாநிலத்தைச் சேர்ந்த உத்தம்குமார் என்பதும், அதிவேகமாக வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.