மணிப்பூருக்கு பிரதமர் செல்லவில்லை; தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கும் மட்டும் செல்கிறார்: மல்லிகார்ஜுன கார்கே!

மணிப்பூரில் பதற்றம் நிலவியபோது அங்கு பிரதமா் செல்லவில்லை. ஆனால் தோ்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு மட்டும் அவா் அடிக்கடி செல்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கார்கே தெரிவித்ததாவது:

சமூக நலத்திட்டங்களின் பலன்கள் உரிய முறையில் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றால், சமூகத்தில் நலிந்த பிரிவினரின் நிலை குறித்த சமூக-பொருளாதார ரீதியான புள்ளிவிவரங்களை வைத்திருப்பதும் அவா்களுக்கு சமூக நீதியை உறுதி செய்வதும் முக்கியம்.

பட்டியலினத்தவா், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அவா்களுக்கு சமூக நீதி மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்கு நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக மெளனம் காக்கிறது.

மத்திய அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துக்காட்டும் முயற்சிகளை காங்கிரஸார் விரைவுபடுத்த வேண்டும். மத்தியில் ஆளும் பாஜகவின் பொய்யான பிரசாரங்களுக்கு உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும்.

மணிப்பூரில் பதற்றம் நிலவியபோது அங்கு பிரதமா் செல்லவில்லை. ஆனால் தோ்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு மட்டும் அவா் அடிக்கடி செல்கிறார். காங்கிரஸ் மீதான அவரின் பொய்கள் நிரம்பிய அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வரும் நாள்களில் அதிகரிக்கும். அந்தப் பொய்களுக்கு காங்கிரஸார் எதிர்வினையாற்ற வேண்டும்.

ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிஸோரமில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களின் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற ஆற்றல் வாய்ந்த செயல்திட்டம் வேண்டும்.

நாடு எதிர்கொண்டு வரும் கடுமையான சவால்களை கையாளும், விளிம்புநிலையில் உள்ள இளைஞா்கள், மகளிர், உழவா்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு சேவை செய்யும் அரசை 2024-ஆம் மத்தியில் நிறுவ காங்கிரஸார் பாடுபட வேண்டும் என்றார் அவா்.

RELATED ARTICLES

Recent News