மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் செந்தில் பாலாஜி. இவர், அதிமுகவில் இருந்தபோது, அரசு பணி பெற்று தருவதாக கூறி, சிலரிடம் இருந்து பணம் பெற்று, மோசடி செய்ததாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், கடந்த ஜுன் 14-ஆம் தேதி அன்று, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அப்போது, அவரை விசாரணைக்கு அழைத்து செல்லும்போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அறுவை சிகிச்சைக்கு பிறகு, நீதிமன்ற காவலில் அவர் இருந்து வருகிறார். இதற்கிடையே, ஜாமீன் பெற வேண்டும் என்று நீதிமன்றத்தில் இரண்டு முறை மனுதாக்கல் செய்திருந்தார்.
ஆனால், இரண்டு முறையும், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வாறு இருக்க, செந்தில் பாலாஜி தரப்பு, 3-வது முறையாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அந்த விசாரணையின்போது, அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு, ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், ஒத்திவைத்தது.