திரைப்படத் துறையில் சர்வாதிகாரத்தைக் கோலோச்சுகின்றனர். திமுக ஆட்சியில்தான் நடக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அதாவது கடந்த பத்து வருடங்களில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இருபது, முப்பது படங்களைத்தான் வெளியிட்டது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டிருக்கிறது.
திரைப்பட கலைஞர்களைப் பயமுறுத்தி, அச்சுறுத்தி திரைப்படம் எடுக்க விடாமல் செய்கிறார்கள். அப்படி திரைப்படம் எடுத்தாலும் தங்களிடம்தான் கொடுக்க வேண்டும் என கூறுகின்றனர். முழுக்க முழுக்க திரைப்படத் துறையில் சர்வாதிகாரத்தைக் கோலோச்சுகின்றனர். திமுக ஆட்சியில்தான் இவ்வாறு நடக்கிறது. எங்களுடைய ஆட்சிக்கும், அவர்களுடைய ஆட்சிக்கும் இருக்கும் வித்தியாசத்தை திரைத் துறையினர் உணர வேண்டும். ஆனால், அவர்கள் மெளனம் சாதிப்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. திரைத் துறையினர் இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.
லியோ படம் தொடர்பாக நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கின்றனர். என்ன நடக்கின்றதென்று பார்ப்போம்’’ என்றார் ஜெயக்குமார்.