காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில், இதற்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடந்த 7-ஆம் தேதி ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலுக்கு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்துவிட்டதாக காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த வான் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என காசா குற்றம் சாட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இஸ்லாமிய ஜிகாத் அமைப்பே இதற்குக் காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வருகை தர உள்ள நிலையில், இந்த தாக்குதல் காசா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகளும், ஐநாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் – காசா இடையே உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அரபு நாடுகளும், ஐநாவும் வலியுறுத்தியுள்ளன.