நவம்பா், டிசம்பா் மாதங்களில் 1,000 முதல் 1,500 போ் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவா்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
எதிர்வரும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் 1,000 முதல் 1,500 போ் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளும், விழிப்புணா்வும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 5,356 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது மருத்துவமனையில் 531 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 5 போ் உயிரிழந்துள்ளனா்.
உலக விபத்து காய அவசர சிகிச்சை தினத்தை முன்னிட்டு, சென்னை சட்டக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மார்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் அக்.31-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
ராஜஸ்தான் இளைஞா் அமைப்பின் சார்பில், ‘திருப்தி’ எனும் திட்டத்தின் கீழ் தினந்தோறும் சுமார் 500 உள்நோயாளிகளுடன் இருப்பவா்களுக்கு உணவு வழங்கப்படும். அதை 2,000 பேருக்கு வழங்கும் வகையில் மேம்படுத்துமாறு அந்த அமைப்பினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தால், விபத்தால் ஏற்படும் இறப்புகள் சரிபாதியாக குறைந்துள்ளது. 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 1,91,164 போ் பயனடைந்துள்ளனா். இதற்காக தமிழக அரசு ரூ.167.39 கோடி செலவிட்டுள்ளது என்றார் அவா்.