தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ கூறினார்.
அதிமுக கோவை புறநகர் தெற்கு, வடக்கு மாவட்ட பூத் கமிட்டிபொறுப்பாளர்கள் கூட்டம், கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த இரண்டரை ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் தமிழக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும்பணிகள் அனைத்தும் கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கி, தொடங்கிவைக்கப்பட்ட பணிகள்தான். மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் எந்த பணியும் நடைபெறுவதில்லை.
வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். அதேபோல, எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் வந்தாலும், அதிமுகதான் வெற்றிபெறும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆளுநர் மாளிகை அருகே யாரோ ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியதற்கு தமிழக அரசு எப்படிப் பொறுப்பாகும் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளது, சரியான விளக்கம் அல்ல.
அதிமுக ஆட்சியில் காவல்துறை கட்டுப்பாடுடன் இருந்ததுடன், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருந்தது. சட்டம்-ஒழுங்குசரியாக இருந்தால்தான், தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருவார்கள். ஆனால், தற்போது மோசமான சூழல் நிலவுகிறது. எனவே, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.