பாஜக தலைமையிலான அரசு இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியை பிடித்துள்ளது. இந்த 10 ஆண்டுகால ஆட்சியில், பாஜக மீது, எதிர்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
அதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் தங்களுக்கான ஆயுதமாக மாற்றி, அரசியல் தலைவர்களை பாஜக மிரட்டி பணிய வைக்கிறது என்பது தான்.
இதுமட்டுமின்றி, எதிர்கட்சி தலைவர்கள் வழக்குகளில் சிக்கும்போது, அவர்களுக்கான ஜாமீன் வழங்காமல் இருப்பதும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இவ்வாறு இருக்க, மதுபான கொள்ளை முறைகேட்டில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் சிசோடியா சமீபத்தில் சிக்கியிருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜாமீன் தொடர்பான மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். இதற்கிடையே, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், நாளை விசாரணை நடத்துவதற்கு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிபில் சிபல், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கிட்டதட்ட அனைத்து எதிர்கட்சி தலைவர்களையும் அமலாக்கத்துறை டார்கெட் செய்கிறது.
அமலாக்கத்துறையும், எதிர்கட்சி தலைவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுவதும், தங்களுக்கான ஆயுதமாக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. நீதிமன்றங்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.
பாஜக அரசு, PMLA ( Prevention Of Money Laundering Act ) சட்டத்தை மிகவும் அப்பட்டமான முறையில் துஷ்பிரயோகம் செய்கிறது” என்று கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி நேற்று பதிவிட்ட ட்வீட்டில், “உச்சநீதிமன்றம் சிசோடியாவின் ஜாமீனை ரத்து செய்துள்ளது. அனைத்து எதிர்கட்சி தலைவர்களும், சிறைக்கு செல்வதற்கு டார்கெட் செய்யப்படுகிறார்கள்.
பிறகு, அனைத்து விதமான ஆதாரங்களும் வருகிறது. ‘இந்தியா கூட்டணி’ ஒருமித்த குரலில் நிச்சயம் பேச வேண்டிய நேரம் இது.” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.