விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் கார்த்திகேயன் தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நிச்சயிக்கப்பட்டது. இதனையடுத்து, நிச்சயதார்த்த விழாவுக்கான சேலை வாங்குவதற்காக இரு வீட்டாரும் இரண்டு கார்களில் காஞ்சிபுரம் சென்றுள்ளனர். காந்தி சாலையில் உள்ள கடையில் அறுபதாயிரம் ரூபாய் மதிப்புமிக்க புடைவைகளை வாங்கிவிட்டு காமாட்சி அம்மன் தெற்கு கோபுரம் அருகே காரை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.
சாமி தரிசனம் செய்துவிட்டு சுமார் 1மணி நேரத்திற்கு பின்னர் காரை எடுக்க வந்த போது காரின் பின்பக்க கண்ணாடி உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். காரில் வைக்கப்பட்டிருந்த, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப், 60,000 ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகள் மற்றும் 20,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.