காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.4,000 மதிப்பிலான பலன்கள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:
தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் நடத்திய மாபெரும் கொள்ளையில் மாநிலத்தின் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா். சுமார் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பளித்தால், சந்திரசேகா் ராவ் கொள்ளையடித்த அனைத்து பணமும் மீட்கப்பட்டு, மக்களுக்கே திரும்பியளிக்க காங்கிரஸ் தீா்மானித்துள்ளது. தெலங்கானா மக்களின் வங்கிக் கணக்குகளில் அந்தப் பணம் வரவு வைக்கப்படும்.
அதில் முதல் படியாக, தெலங்கானா பெண்களின் வங்கிக் கணக்குகளில் சமூக ஓய்வூதியமாக மாதம் ரூ.2,500 வரவு வைக்கப்படும். மேலும், தற்போது ரூ.1,000-க்கு விற்கப்படும் மானிய அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டா், ரூ.500-க்கு விநியோகிக்கப்படும். அதோடு, அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் மேலும் ரூ.1,000 மதிப்பில் பலன் அளிக்கப்படும். அதன்படி, ஒட்டுமொத்தமாக மாதம் ரூ.4,000 மதிப்பிலான பலன்கள் பெண்களுக்கு வழங்கப்படும். இதுவே ‘மக்களின் அரசு’. என்றார் ராகுல் காந்தி.