சட்டீஸ்கர் மாநிலம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் மும்மரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அமலாக்கத்துறை அதிகாரிகள், ரூபாய் 5.39 கோடியை, அசிம் தாஸ் என்ற இளைஞரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பணம் அனைத்தும், துபாயில் இருந்து கொண்டு வரப்பட்டது என்றும், மகாதேவ் பெட்டிங் ஆப் மூலம், தேர்தல் செலவுகளுக்காக பூபேஷ் பாகலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும், தெரியவந்துள்ளது.
இந்த தகவல், அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சட்டீஸ்கரில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரத்திற்காக, ரூபாய் 500 கோடியை முதலமைச்சர் பூபேஷ் பாகல் பெற்றிருப்பதாக, குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹவாலா பணப்பரிவர்த்தணைகள் மூலம், காங்கிரஸ் கட்சி பணம் பெறுவதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், மக்கள் இவ்வளவு பெரிய தொகையை ஆதாரமாக பார்த்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்ததற்கான, அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஆதாரம் கிடைத்துள்ளது என்றும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக, சட்டவிரோத பெட்டிங் நடத்துபவர்கள் பணம் கொடுத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பூபேஷ் பாகல் பதவியில் இருக்கும்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.